ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து தஞ்சையில், பெண்ணிடம் மோசடி செய்ய முயற்சி


ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து தஞ்சையில், பெண்ணிடம் மோசடி செய்ய முயற்சி
x
தினத்தந்தி 8 July 2021 8:49 PM IST (Updated: 8 July 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து பெண்ணிடம் மோசடி செய்ய முயன்ற வாலிபர் தப்பி ஓடினார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி நேதாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி ராஜலட்சுமி(வயது 65). இவர், தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பதற்காக வந்தார்.

அப்போது அவர் அருகில் நின்ற ஒரு வாலிபரிடம் பணம் எடுத்து தருமாறு கூறினார். அதற்கு அந்த வாலிபர் ஏ.டி.எம். கார்டையும், ரகசிய எண்ணையும் வாங்கினார். பின்னர் அவர் தான் வைத்திருந்த வேறு ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தி பணம் எடுப்பது போல நடித்து விட்டு பணம் வரவில்லை என கூறி விட்டு தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்தார்.

ராஜலட்சுமி கொடுத்த ஏ.டி.எம். கார்டை தான் வைத்துக்கொண்டு அந்த வாலிபர் வேகமாக சென்றார். வாலிபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டை பார்த்த ராஜலட்சுமி அது தனது கார்டு அல்ல என்பதை தெரிந்து கொண்டு, அந்த வாலிபரை சத்தம் போட்டு அழைத்தார். ஆனால் அதை காதில் வாங்காதது போல நடித்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே ராஜலட்சுமி கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் தப்பி ஓடிய வாலிபரை மடக்கிப்பிடித்து தஞ்சை மேற்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த முகமது கனி மகன் முகமது உவைஸ் (35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story