ஆழ்வார்திருநகரியில் வீடு புகுந்து 89 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


ஆழ்வார்திருநகரியில் வீடு புகுந்து 89 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 July 2021 8:53 PM IST (Updated: 8 July 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரியில் வீடு புகுந்து 89 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரியில் வீடு புகுந்து 89 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
புது வீடு கட்டும் பணி
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வாய்க்கால்கரை தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 60). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகளுக்கு பக்கத்து தெருவில் புது வீடு கட்டப்பட்டு வருகிறது. 
அந்த வீடு கட்டும் பணியை மாரியம்மாள் கண்காணித்து வந்தார். இதற்காக பகல் நேரங்களில் அங்கு செல்லும் அவர் இரவில் மட்டும் தனது வீட்டுக்கு வந்து தங்குவார்.
89 பவுன் கொள்ளை
இந்த நிலையில் மாரியம்மாள் கடந்த மாதம் 19-ந்தேதி ஒரு விசேஷ வீட்டுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது தங்க நகைகளை பீரோவில் வைத்து பூட்டி உள்ளார்.
நேற்று முன்தினம் மாரியம்மாள் புதுவீடு கட்டும் பணியை பார்த்துவிட்டு இரவில் வீடு திரும்பியபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பீரோவை யாரோ மர்மநபர்கள் திறந்து, 89 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தங்க நகைகள் வைத்திருந்த பெட்டிகள் அனைத்தும் அப்படியே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. நகைகளை மட்டும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். சாவி மூலம் பீரோவை திறந்து கைவரிசை காட்டியதும் தெரியவந்து உள்ளது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் இருக்கும்.
இந்த துணிகர கொள்ளை பற்றி தகவல் அறிந்ததும் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். ேமலும் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி ேதடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story