நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை சுற்றுலா மையமாக மாற்றப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பு அணை சுற்றுலா மையமாக மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அமைந்து உள்ளது. இதனை கோரையாறு தலைப்பு எனவும் அழைப்பர். ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து தண்ணீர் கல்லணையை வந்தடையும்.
கல்லணையில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் பெரிய வெண்ணாறு வழியாக நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பை (கோரையாறு தலைப்பு) வந்தடையும். இங்கு உள்ள அணையில் இருந்து வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய 3 ஆறுகளில் பிரித்து அனுப்பப்படுவதன் மூலமாக திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்துக்கு பயன்படுகிறது.
மூணாறு தலைப்பு அணை பகுதி இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் மூணாறு தலைப்பு அணை கட்டப்பட்டது. இங்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டிருந்த பயணிகள் ஆய்வு மாளிகை கட்டிடம் ஒரு காலத்தில் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு உயரதிகாரிகள் தங்குமிடமாக இருந்தது. இந்த கட்டிடம் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இதை புதுப்பித்து கட்ட வில்லை.
நீடாமங்கலத்தில் இருந்து மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த காடுகள் போல் ஏராளமான மரங்கள் உள்ளன. அணைபகுதியில் தேக்கு மரங்கள் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு மயில்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.
மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்குவோம் முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்கினால் ஆலங்குடி குருபகவான் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு வருபவர்கள் மூணாறு தலைப்பு அணை பகுதிக்கும் வந்து செல்வார்கள். இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்வாதாரம் பெருகும் எனவே மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா மையமாக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story