நாகை- செல்லூர் இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் - மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


நாகை- செல்லூர் இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் - மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 July 2021 9:22 PM IST (Updated: 8 July 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

நாகை-செல்லூர் இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

சுரேஷ்(தி.மு.க.):-புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோன்.கொரோனா காலத்திலும் மக்கள் நலன் கருதி ஓயாது உழைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் நாம் அனைவரும் நடக்க வேண்டும்.

சரபோஜி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி):- நாகை-செல்லூர் இடையே சேதமடைந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை தினந்தோறும் ஏராளமானவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக நாகை மாவட்டத்தை பிரித்தது போல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டும்.

குமாரசாமி(தி.மு.க.):- மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி கிளையை திறக்க வேண்டும்.

சுப்பையன்(அ.தி.மு.க.):- வேதாரண்யம் பகுதியில் உழவர் சந்தை திறக்கப்படவுள்ளது. நகர பகுதியில் உழவர் சந்தை திறப்பதை விட கிராம பகுதிகளில் திறந்தால் அனைவருக்கும் பயன்நிறைந்ததாக இருக்கும்.

உமாமகேஸ்வரி( ஊராட்சிக்குழு தலைவர்) :- கொரோனா வைரஸ் தொற்று 3-வது அலை பரவுவதற்குள் அனைத்து உறுப்பினர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். நம்மை சுற்றியுள்ளவர்களையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுரை வழங்க வேண்டும்.

ஊராட்சி செயலாளர் (கோவிந்தராஜூ):-உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறைக்கு அனுப்பப்படும் கோரிக்கை மனுவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story