தாழ்வான மின்கம்பிகளால் காத்திருக்கும் ஆபத்து
கூடலூர்-கோழிக்கோடு சாலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து காத்திருக்கிறது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்து உள்ளது.
கூடலூர்,
கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள துப்புகுட்டிபேட்டை பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. மேலும் கூடலூர்-கேரளா சாலை என்பதால் வாகன போக்குவரத்து மிக்க பகுதியாக விளங்குகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் நாடார் திருமண மண்டபம் அருகே மின் கம்பம் ஒன்று வளைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் மின் கம்பிகளும் மிகவும் தாழ்வாக செல்கிறது. மேலும் மழை பெய்து வருவதால் மின் கம்பம் நாளுக்கு நாள் சரிந்து மின் கம்பிகளும் தாழ்ந்து வருகிறது.
இதனால் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களில் மின்கம்பிகள் உரசும் ஆபத்து காத்திருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். சரக்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மின் கம்பிகளில் சில நேரங்களில் உரசி விடுகிறது. இதனால் மின்தடையும் ஏற்பட்டு விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகார் எழுந்து உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story