கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் பழுதான சாலை சீரமைக்கப்படுமா?


கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் பழுதான சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 8 July 2021 9:50 PM IST (Updated: 8 July 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் பழுதான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து ரைபிள் ரேஞ்சு, கல்பனா காட்டேஜ், டானிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள், அரசு கால்நடை மருத்துவமனை, தனியார் மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்து இருக்கின்றன. இதனால் அந்த சாலை வழியாக ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக சாலையின் ஒரு சில பகுதிகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளன. 

இதனால் அந்த சாலையில் நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் உள்ள குழிகளை தற்காலிகமாக மண்ணால் மூடி சமப்படுத்தி, அதில் நடந்து செல்கின்றனர்.

இது தவிர செங்குத்தாக அமைந்து உள்ள இந்த சாலை பழுதடைந்து உள்ளதால் கீழ் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்கள் அடிக்கடி குழியில் சிக்கி விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே அனைத்து தரப்பினர் நலன் கருதி பழுதடைந்த அந்த சாலையை சீரமைக்க பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story