மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்


மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 8 July 2021 9:50 PM IST (Updated: 8 July 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

சோலூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது. இதற்கு பெற்றோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிளஸ்-1 உள்ளிட்ட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் கணிசமாக மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

ஊட்டி அருகே சோலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர் சேர்ந்து உள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது மாணவ-மாணவிகள் 145 பேர் உள்ளனர். 

14 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.இந்த கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டது. பின்னர் மாணவ-மாணவிகள், பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர் அயரின் ரெஜி ஆன்லைன் வகுப்புகள் நடத்த கருத்து கேட்டார்.

அதன்படி நேற்று முதல் சோலூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தலா அரை மணி நேரம் என 2 பாடவேளைகள், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தலா 40 நிமிடம் என 3 பாடவேளைகள் நடத்தப்படுகிறது.

அனைத்து வகுப்புகளிலும் வீட்டில் இருந்தபடியே மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் அவர்களை சந்தித்து பாடங்களை எடுத்து வருகின்றனர். அரசு பள்ளியின் இந்த முயற்சி, பெற்றோரால் பாராட்டப்பட்டு வருகிறது.

Next Story