காட்டேரி தோட்டக்கலை பண்ணையில் ஆண்டுக்கு 1000 கிலோ உயிரி உரங்கள் உற்பத்தி


காட்டேரி தோட்டக்கலை பண்ணையில் ஆண்டுக்கு 1000 கிலோ உயிரி உரங்கள் உற்பத்தி
x
தினத்தந்தி 8 July 2021 10:15 PM IST (Updated: 8 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

காட்டேரி தோட்டக்கலை பண்ணையில் ஆண்டுக்கு 1000 கிலோ உயிரி உரங்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் காட்டேரியில் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இங்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்து பார்வையிட்டார். 

பின்னர் அவர் கூறியதாவது:- இந்த பண்ணையில் தரமான நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்களான மண்புழு உரம், பஞ்சகாவ்யா, தசகாவ்யா உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி இயற்கை வேளாண்மையில் முன்னோடி மாவட்டமாக விளங்குவதால் விவசாயிகளுக்கு தேவையான தரமான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், உயிரி உரங்கள் உற்பத்தி மற்றும் வினியோகம் செய்வதற்காக ஆய்வகம் திறக்கப்பட்டது. ஆண்டுக்கு 5 ஆயிரம் கிலோ டிரைகோடெர்மா, 3 ஆயிரம் கிலோ பேசில்லஸ் ஆகிய உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிரி உரங்கள் தலா 1000 கிலோ உற்பத்தி செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிரைகோடெர்மா, பேசில்லஸ் மூலம் பயிர்களில் விதை நேர்த்தி மற்றும் மண்ணில் இடுவதன் மூலம் பயிர்களை தாக்கும் வேர் அழுகல் மற்றும் வாடல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. 

அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிரி உரங்கள் மண் வளத்தை மேம்படுத்துவதற்கும், மண்ணில் உள்ள சத்துக்களை எளிதாக தாவரங்கள் எடுத்து கொள்ளவும் உதவுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உரங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், குன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பபிதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story