ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை முறைகேடாக பயன்படுத்துகின்றனர்
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
வாணியம்பாடி
கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, நேற்று ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்குள்ள பதிவேடுகள் அனைத்தையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து 102 ரெட்டியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை பார்வையிட்டு வருகைப்பதிவேடு சரியாக உள்ளதா என சோதனை செய்தார்.
பின்னர் ராணிப்பேட்டை என்ற கிராமத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை நேரில் ஆய்வு செய்து கட்டிட பணிகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.
முறைகேடாக
அப்போது பெரிய குரும்பத்தெரு கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.பி.ஜெய்சக்தி மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது பெரிய குரும்பத்தெரு கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை முறைகேடாக வேறு பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். கடந்த 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையில் சிங்காரம் என்ற நபரின் பெயரில் வருகைப் பதிவேட்டில் பதிந்து விட்டு, சின்ன குரும்பத் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற வேறு ஒருவர் நிலத்தில் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறினார். புகைப்பட ஆதாரங்களுடன் இருப்பதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.
ஆய்வின்போது ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், மணவாளன், மற்றும் செல்வி உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story