பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 95 சதவீதம் நிறைவு


பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 95 சதவீதம் நிறைவு
x
தினத்தந்தி 8 July 2021 10:32 PM IST (Updated: 8 July 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாகவும், விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாகவும், விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தார்.

பாதாள சாக்கடை திட்டம்

பொள்ளாச்சியை முழுசுகாதாரமான நகரமாக மாற்றுவதற்கு பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.170 கோடியே 22 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

பாதாள சாக்கடை திட்டம் நில அமைப்புபடி 5 கழிவுநீர் சேகரிப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும் தாழ்வான பகுதிகளில் நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, நீரேற்று நிலையங்கள் மூலம் கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது. பின்னர் சேகரிக்கப்படும் கழிவுநீர் சந்தைபேட்டையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சுத்திகரிக்கப்படுகிறது.

 அங்கு தினமும் 11.25 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்திற்கு செல்லும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதிகாரி ஆய்வு

இந்த நிலையில் சந்தைபேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகளை செயற்பொறியாளர் செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் ரூ.170 கோடியே 22 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த திட்டத்திற்கு 7,900 ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கழிவுநீர் நிலையம், நீரேற்று நிலையம் கட்டும் பணிகள் முடிந்து விட்டன. இதேபோன்று ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் பணிகள் நிறைவடைந்து விட்டன.

விரைவில் சோதனை ஓட்டம்

சந்தைபேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகின்றது. இங்கு கழிவுநீரை சுத்திகரிக்க நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கழிவுநீர் நிலையங்களில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரும் கழிவுநீர் நவீன தொழில்நுட்பம் மூலம் வடிகட்டப்படுகிறது.

இதன் மூலம் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படும். படிபடியாக வடிகட்டி நவீன எந்திரத்தில் 4 மணி நேரம் இருப்பு வைத்து சுத்திகரிக்கப்படும். பின்னர் குளோரின் கலந்த மற்றொரு தொட்டிக்கு சுத்திகரித்த தண்ணீர் கொண்டு சென்று கழிவுநீரில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும். 

இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதுவரைக்கும் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. தினமும் 11.25 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். மேலும் வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பணிகள் முழுமையாக முடித்து விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story