மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி


மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
x
தினத்தந்தி 8 July 2021 10:36 PM IST (Updated: 8 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியானார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி நாகை மாலி எம்.எல்.ஏ. மற்றும் உறவினர்கள் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியானார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி நாகை மாலி எம்.எல்.ஏ. மற்றும் உறவினர்கள் மேற்பார்வை ெபாறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய ஊழியர்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சபரி கிருஷ்ணன் (வயது 27). 
இவர், வேளாங்கண்ணியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ‘கேங் மேனாக’ வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் பரவை அருகே வடவூர் பாலம் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கருவேல மரங்களை இவர் வெட்டிக்கொண்டு இருந்தார். 
மின்சாரம் தாக்கி பலி
அப்போது திடீரென சபரி கிருஷ்ணனை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சபரி கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முற்றுகையிட்டு போராட்டம்
இந்த நிலையில் சபரி கிருஷ்ணன் இறப்பிற்கு உயர் அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என கூறி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று நாகை பெருமாள் வடக்கு வீதியில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தனர். 
நாகை மாலி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.வும், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத் தலைவருமான மாரிமுத்து, மாவட்ட செயலாளர் தங்கமணி மற்றும் சபரி கிருஷ்ணனின் உறவினர்கள் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
ரூ.3 லட்சம் இழப்பீடு 
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சபரி கிருஷ்ணன் பலியானது தொடர்பாக மின்சாரவாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரி கிருஷ்ணனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு மின்வாரிய அலுவலகத்தில் பணி வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். 
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் நக்கீரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story