ஆம்பூர் அருகே வங்கி முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
வங்கி முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (வயது 26). இவர் உமராபாத் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடிக்கையாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் வங்கி காசோலை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதற்காக நந்தினி தான் வாடிக்கையாளராக உள்ள தனியார் வங்கியில் காசோலை புத்தகம் கேட்டுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் காசோலை புத்தகம் கொடுக்காமல் கடந்த இரண்டு மாதமாக அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நந்தினி நேற்று பெட்ரோல் கேனுடன் வந்து வங்கி முன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து, வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த 30 நிமிடத்தில் நந்தினிக்கு காசோலை புத்தகத்தை வங்கி மேலாளர் வழங்கினார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story