மின்சார வாரியத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி


மின்சார வாரியத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 8 July 2021 11:04 PM IST (Updated: 8 July 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

மின்சார வாரியத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் வாலிபர் புகார் மனு கொடுத்தனா்.

விழுப்புரம், 

கடலூர் மாவட்டம் நல்லாத்தூரை சேர்ந்த வேணு மகன் பிரவீன்குமார் (வயது 28) என்பவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திருப்புகழ் தெருவை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அவர், தான் தமிழ்நாடு மின்சார வாரியத்துறையில் பணிபுரிவதாகவும், மின்வாரியத்துறையில் தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும் கூறினார். உடனே நான் அவரிடம், ஐ.டி.ஐ. எலக்ட்ரிக்கல் படித்துள்ள எனது தம்பி கமலக்கண்ணனுக்கு மின்வாரியத்துறையில் வேலை வாங்கித்தரும்படி கேட்டேன். அதற்கு அவர் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறியதன்பேரில் நான், அவர் கேட்ட பணத்தை கடந்த 21.11.2017 அன்று அவரது வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்தை செலுத்தினேன். மீதமுள்ள ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை அவரிடம் நேரடியாக கொடுத்தேன். பணத்தை பெற்ற அவர், எனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித்தராமல் காலம் தாழ்த்தி வந்தார். நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை நேரில் சந்தித்து எனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித்தரும்படியும், இல்லையெனில் நான் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படியும் கேட்டேன். அதற்கு அவர், வேலையும் வாங்கித்தர முடியாது, பணத்தையும் திருப்பித்தர முடியாது என்று கூறி என்னை தகாத வார்த்தையால் திட்டினார்.
இதுபற்றி விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் இதுவரையிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாங்கள் இதில் தலையிட்டு என்னிடம் பணத்தை மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.

Next Story