காணாமல் போன நீர்வரத்து ஓடை 40 ஆண்டுக்கு பிறகு மீட்பு


காணாமல் போன நீர்வரத்து ஓடை 40 ஆண்டுக்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 8 July 2021 5:34 PM GMT (Updated: 8 July 2021 5:34 PM GMT)

தேவகோட்டை அருகே காணாமல் போன நீர்வரத்து ஓடை 40 ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்டது.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே காணாமல் போன நீர்வரத்து ஓடை 40 ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்டது.
ஓடை மாயம்
தேவகோட்டை அருகே உள்ள மருதவயல் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது.இந்த கண்மாய்க்கு பருத்தியூர் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் சின்னக்கரையான்-பெரியகரையான் ஏந்தலுக்கு வந்து சேரும். அங்கிருந்து மருதவயல் கண்மாய்க்கு நீர்வரத்து ஓடை வழியாக கண்மாயை வந்து அடையும். அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் ஆட்டூர், கோவனி ஆகிய கண்மாய்களில் விழுந்து அதன் பின்னர் அங்கிருந்து மேலும் பல கண்மாய்களுக்கு செல்லும்.
இயற்கையாகவே அமையப்பெற்ற இந்த நீர் வரத்து ஓடையை 9 விவசாயிகள் அழித்து ஓடை இருந்த இடம் தெரியாமல் விவசாயம் செய்து வந்தனர்.16 மீட்டர் அகலமும் 9 மீட்டர் ஆழம் கொண்ட நீரோடையை கண்டுபிடித்து தர கோரி கடந்த 40 ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஆகி வந்தது.
மீட்பு
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தினத்தந்தியில் கண்மாய் ஓடையை காணவில்லை என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை ஒட்டி அப்போதைய மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரன் ஓடையை கண்டுபிடித்து மீட்க உத்தரவிட்டார். அவரது உத்தரவை தொடர்ந்து ஓடை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை தாமதமாகி வந்தது.
இந்த நிலையில் நேற்று மருதவயல் கிராம மக்கள் சார்பில் தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினத்திடம் மீண்டும் ஓடையை மீட்டுத்தாருங்கள் என கோரிக்கை வைத்தனர்.கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட தாசில்தார் ராஜரத்தினம், சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருடன் ஓடை இருக்கும் இடத்திற்கு சென்றனர். ஓடை இருந்த தடமே தெரியாமல் ஓடை இருக்கும் இடத்தை சர்வேயர் படத்தை வைத்து கண்டுபிடித்தார். உடனடியாக ஓடை அளவை அளந்து கல் போடப்பட்டது.
விவசாயி எதிர்ப்பு
இதற்கிடையில் ஓடையை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் ஒருவர் ஓடை சம்பந்தமான வழக்கில் கோர்ட்டில் தடை இருக்கிறது எனக் கூறினார். அப்படி தடை இருந்தால் கொண்டு வந்து தாருங்கள். 2 நாள் காத்திருக்கிறோம். இல்லை என்றால் வருகிற 13-ந்தேதி ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். 40 ஆண்டுகளுக்கு பின்பு ஓடை மீட்கப்பட்டு உள்ளதால் அந்த கிராம விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story