அப்துல்கலாம் நினைவிடம், அருங்காட்சியகம் திறக்கப்படுமா?


அப்துல்கலாம் நினைவிடம், அருங்காட்சியகம் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 8 July 2021 11:10 PM IST (Updated: 8 July 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம்
ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது.
அப்துல்கலாம் நினைவிடம்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் 21-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன. இதேபோல் ராமேசுவரம் பேக்கரும்பு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் மூடப்பட்டது. 
கொரோனா பரவல் குறைந்த பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சுற்றுலா இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் நினைவிடங்கள் மீண்டும் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட்டன. தமிழகத்தில் அனைத்து அருங்காட்சியகங்கள் நினைவிடங்கள் திறக்கப்பட்ட நிலையிலும் ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடம், அருங்காட்சியகம் திறக்கப்படவில்லை.
மேலும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மீண்டும் அனைத்து சுற்றுலா இடங்களும் அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன. தற்போது தொற்று குறைந்து வருவதன் எதிரொலியாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதுடன் அனைத்து அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கோரிக்கை
ஆனால் ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகமோ 475 நாட்களை கடந்தும் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. இதனால் தினமும் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும், பார்வையாளர்களும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் அங்குள்ளே கலாமின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்த கண்டுபிடிப்பு மற்றும் புகைப் படங்களையும் பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் கீழ் கட்டப்பட்டுள்ள அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தை வழக்கம்போல் பார்வையாளர்கள் பார்த்து செல்ல உடனடியாக திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story