ராமேசுவரம் மீனவர்கள் வலைகள் கிழிந்து சேதம்


ராமேசுவரம் மீனவர்கள் வலைகள் கிழிந்து சேதம்
x
தினத்தந்தி 8 July 2021 11:11 PM IST (Updated: 8 July 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை அரசால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட பழைய பஸ்களில் சிக்கி ராமேசுவரம் மீனவர்களின் வலைகள் கிழிந்து சேதம் அடைந்தன.

ராமேசுவரம்
இலங்கை அரசால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட பழைய பஸ்களில் சிக்கி ராமேசுவரம் மீனவர்களின் வலைகள் கிழிந்து சேதம் அடைந்தன.
கடலுக்குள் பழைய பஸ்கள்
இ்ந்திய-இலங்கை கடல் எல்லை அருகே சில வாரங்களுக்கு முன்பு, இலங்கை அரசு உருக்குலைந்த பழைய பஸ்களை கடலுக்குள் இறக்கியது. மீன்கள் இனப்பெருக்கத்துக்காக இந்த பஸ்கள் இறக்கப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக மீனவர்களின் மீ்ன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தும் நோக்கில்தான் இலங்கை அரசு உருக்குலைந்த பஸ்களை கடலுக்குள் மூழ்கடித்து இருப்பதாக ராமேசுவரம் உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் குற்றம்சாட்டினர். 
மேலும் அந்த பஸ்கள், கடல் அலைகளின் வேகத்தால் இந்திய கடல் பகுதிக்குள் கூடிய விரைவில் இழுத்துவரப்பட்டுவிடும் எனவும் அப்போது மீனவர்கள் தெரிவித்து இருந்தனர்.
7 படகு மீனவர்கள்
இந்த நிலையில், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர்.  கச்சத்தீவுக்கும்-தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்தனர். அப்போது, 3 ரோந்து கப்பல்களை நிறுத்தி வைத்து இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை செய்துள்ளனர். இதனால் அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்துள்ளனர்.  அப்போது 7 படகுகளில் இருந்தபடி அடுத்தடுத்து மீனவர்கள் கடலில் வலைவீசி உள்ளனர். இலங்கை அரசால் சில வாரங்களுக்கு முன்பு கடலில் இறக்கி மூழ்கடிக்கப்பட்ட பழைய பஸ்களின் கூண்டுகளில் அந்த மீனவர்களின் வலைகள் சிக்கின. அந்த. வலைகளை திரும்ப எடுக்க முடியாமல் மீனவர்கள் கஷ்டப்பட்டு இழுத்துள்ளனர். இதில் 7 படகில் இருந்த மீனவர்களின் வலைகளும் கிழிந்து சேதமடைந்தன. 
மீனவர்கள் கவலை
நேற்று காலை மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடனும், சேதமான வலைகளுடனும் அந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததும் மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இலங்கை அரசு கடலுக்குள் இறக்கிய பழைய பஸ்களின் கூண்டுகளால் மீன்பிடி வலைகள் சேதம் அடைந்திருப்பது ராமேசுவரம் மீனவர்களை கவலை அடையச் செய்துள்ளது.
எனவே கடலுக்குள் இறக்கப்பட்ட பழைய பஸ்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story