மக்காச்சோளத்தை விற்பனை செய்யும் விவசாயிகள்
உடுமலை பகுதியில் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் இருப்பு வைத்துள்ளவற்றை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் இருப்பு வைத்துள்ளவற்றை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மக்காச்சோள சாகுபடி
உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை அடிப்படையாக கொண்டு மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர இறவை பாசனத்திலும் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்குக் கைகொடுக்காத நிலையே ஏற்பட்டது. போதிய மழையின்மையால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, படைப் புழுக்கள் தாக்குதலால் மகசூல் இழப்பு, போதிய விலை கிடைக்காததால் வருவாய் இழப்பு என்று தொடர்ச்சியாக விவசாயிகள் இழப்பையே சந்தித்து வந்தனர். இந்தநிலையில் தற்போது மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கோழித்தீவன உற்பத்தி
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கோழித்தீவன உற்பத்தியை சார்ந்தே மக்காச்சோள சாகுபடி உள்ளது.உடுமலை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளங்களில் பெருமளவு கோழித்தீவன உற்பத்திக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் கோழித்தீவனங்களுக்கான தேவை மற்றும் மக்காச்சோள வரத்தை பொறுத்தே விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டிலும் அறுவடை சமயத்தில் மக்காச்சோளம் விலை மிகவும் குறைந்து விடுகிறது. அதனால் இருப்பு வைத்து விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைக்கிறோம்.
ஆனால் கடந்த ஆண்டில் பல மாதங்கள் இருப்பு வைத்தும் பலனில்லாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது. இதற்கு கொரோனா ஊரடங்கால் கோழிப்பண்ணைகளுக்கான மக்காச்சோளம் தேவை குறைந்ததும் ஒரு காரணமாக இருந்தது. இதுதவிர கோழித்தீவன உற்பத்தியாளர்கள் பீகார், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து ரெயில் மூலம் மக்காச்சோளங்களை அதிக அளவில் கொண்டு வந்ததும் ஒரு காரணமாகும்.ஆனால் தற்போது மக்காச்சோளம் விலை உயர்ந்து ஒரு குவிண்டால் ரூ. 2 ஆயிரத்து 100 வரை விற்பனையாகிறது.இது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
வெளிமாநில வரத்து
அதேநேரத்தில் தற்போது பீகாரிலிருந்து ரெயில் மூலம் 13 ஆயிரம் டன் மக்காச்சோளம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சில வாரங்களில் கர்நாடகாவிலிருந்தும் மக்காச்சோள வரத்து தொடங்கி விடும். எனவே தற்போதைய விலை நீடிக்க வாய்ப்பில்லை என்பதால் இருப்பு வைத்துள்ள மக்காச்சோளங்களை விற்பனை செய்து வருகிறோம்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இதுகுறித்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் கூறியதாவது:-
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது.மேலும் நல்ல விலை கிடைக்கும்போது தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் விற்பனை செய்து கொடுக்கப்படுவதுடன், ஒரே நாளில் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதனால் நடப்பு சீசனில் 8 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மக்காச்சோளம் இங்கு இருப்பு வைக்கப்பட்டது.விலை உயர்வின் காரணமாக தேசிய வேளாண் சந்தை மூலம் அதிக அளவில் விற்கப்பட்டதால் தற்போது ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலேயே இருப்பு உள்ளது'என்று அதிகாரிகள் கூறினர்.மக்காச்சோள சாகுபடியையே கைவிடும் அளவுக்கு தொடர் சிக்கல்களை சந்தித்த விவசாயிகளுக்கு தற்போதைய விலையேற்றம் புதிய உற்சாகத்தை வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story