அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விரைவில் திறக்கப்படும்


அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விரைவில் திறக்கப்படும்
x
தினத்தந்தி 8 July 2021 11:39 PM IST (Updated: 8 July 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடப் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறினார்.

திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடப் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறினார்.
அரசு மருத்துவக் கல்லூரி
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் உடன் இருந்தார்.
ஆய்வு குறித்து அமைச்சர் கூறியதாவது:-
புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூ.125 கோடி மதிப்பில் 4 கட்டிடங்களுடன் மருத்துவமனை கட்டிடமும், ரூ.107 கோடி மதிப்பில் இரண்டு கட்டிடங்களுடன் கல்வி இயல் கூடம் மற்றும் ரூ.104 கோடி மதிப்பில் 15 கட்டிடங்களுடன் கூடிய குடியிருப்புகள் உள்பட மொத்தம் ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவ கல்லூரி அமைய உள்ளது.
அனைத்து வசதிகளுடன்
இந்த கட்டிடத்தில் மன்றக் கட்டிடம், மருத்துவ ஆசிரியர் குடியிருப்பு, பணியாளர் குடியிருப்பு, உள்ளிருப்பு மருத்துவர் குடியிருப்பு, நிர்வாக அலுவலக கட்டிடம், கல்லூரி முதல்வர் குடியிருப்பு, சமையல் கூடம், சிற்றுண்டியகம், விளையாட்டு மைதானம், நவீன உடற்பயிற்சி கூடம், கலையரங்கம், மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, செவிலியர் விடுதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வாகன நிறுத்துமிடம், மின்தூக்கி, சூரிய ஒளி மின்சார வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இங்கே செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்து 27 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மட்டும் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்தர சிகிச்சை
மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை விரைவாக நிறைவு செய்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் திறந்து வைக்கப்படும். கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதல்-அமைச்சரின் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து வருகிறது.
இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை இந்த வட்டாரத்தில் ஏழை, எளிய, நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்கள் கூட தனியார் மருத்துவமனைக்கு நிகரான உயர்தர சிகிச்சை பெறக் கூடிய வகையில் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 வண்ணத்தொலைக்காட்சி பெட்டி
முன்னதாக திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், பொதுப்பணித்துறை (மருத்துவ கட்டிடங்கள்) பொறியாளர் தவமணி, தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story