பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் ஊர்வலம் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் ஊர்வலம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2021 11:56 PM IST (Updated: 8 July 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்-சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.


கன்னிவாடி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வறேு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி ரெட்டியார்சத்திரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், ரெட்டியார்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். வடக்கு வட்டார தலைவர் முருகேசன், வக்கீல் அணி ஒன்றிய தலைவர் கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராயப்பா, பெலிக்குராஜா, வேலுச்சாமி, முருகன், பாலசுப்பிரமணி, சிவசுப்பிரமணி, சவேரியார், தனபால் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  சின்னாளப்பட்டி, செம்பட்டி
சின்னாளப்பட்டியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பூஞ்சோலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.
சின்னாளபட்டி நகர காங்கிரஸ் தலைவர் நடூர் கனகராஜ், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து சின்னாளப்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஆத்தூர் வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில், செம்பட்டியில் பழனி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பழனி, செந்துறை
செந்துறை சந்தைப்பேட்டையில், வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பழனியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சுரேஷ், அருமைநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தின் போது, மாட்டுவண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி நூதன முறையில் தங்களது எதிர்ப்பை காங்கிரஸ் கட்சியினர் வெளிப்படுத்தினர்.
 தள்ளுமுள்ளு
திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அப்துல் கனிராஜா தலைமையில், நிலக்கோட்டையில் மதுரை சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து சைக்கிள் ஊர்வலம் தொடங்கியது. முன்னதாக அங்கு ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வருகிறவர்களிடம் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து வாங்கினர்.
அப்போது பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரும், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளருமான கரிகால பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். பெட்ரோல் விற்பனை நிலைய வளாகத்துக்குள் ஏன் வந்தீர்கள் என்று அவர்கள் கேட்டனர். இதனால் காங்கிரஸ்-தி.மு.க.வினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி தலைமையிலான போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சைக்கிள் ஊர்வலம் தொடர்ந்து நடந்தது. 
இதில் கட்சி வட்டார தலைவர் கோகுல்நாத், மாநில பொதுச்செயலாளர் சுரேஷ், மாநில செயலாளர்கள் வசந்தம் சரவணன், பர்வேஸ், மாவட்ட நிர்வாகி ரசூல் முகைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி. நடராஜன், நகர செயலாளர் சி. நடராஜன், தொகுதி இளைஞரணி பொறுப்பாளர் கவுரிநாத் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், சைக்கிள் ஊர்வலம் நடத்தியதாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பண்ணைக்காடு
பண்ணைக்காடு அருகே உள்ள ஊத்து என்ற இடத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு காங்கிரஸ் வட்டார தலைவர் மகுடேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் பிரபாகரன், பழனி தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story