பாலக்கோடு அருகே பரிதாபம் பாம்பு கடித்து பெண் பலி மீண்டும் வந்த பாம்பை அடித்துக் கொன்றனர்
பாலக்கோடு அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக பலியானார். இதையடுத்து மீண்டும் வந்த பாம்பை அடித்துக் கொன்றனர்.
பாலக்கோடு:
பாலக்கோட்டை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி செல்வராணி. இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். வீட்டில் உரமூடை வைத்து இருந்தனர். அதில் பதுக்கி இருந்த நல்ல பாம்பு ஒன்று செல்வராணியை கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த பாம்பு வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்குள் மறைந்தது. பாம்பு கடித்த செல்வராணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த பாலக்கோடு போலீசார் பெருமாள் வீட்டுக்கு வந்தனர். அங்கு போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது செல்வராணியை கடித்த அதே பாம்பு மீண்டும் பெருமாள் வீட்டுக்கு வந்தது. உடனே அந்த பாம்பை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story