‘நீட்’ தேர்வு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்து மாணவர்களை குழப்ப வேண்டாம் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி


‘நீட்’ தேர்வு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்து மாணவர்களை குழப்ப வேண்டாம்  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 9 July 2021 12:33 AM IST (Updated: 9 July 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்து மாணவர்களை குழப்ப வேண்டாம் என்று திருச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மலைக்கோட்டை
ஆலோசனை கூட்டம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விரைந்து மாதகணக்கில் காத்துகிடக்காமல் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யவேண்டும். பயிர் காப்பீட்டு இழப்பீட்டை அந்தந்த பருவத்திலேயே வழங்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் காலதாமதமின்றி பயிர்கடனை வழங்க வேண்டும். விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து வேளாண் உபகரணங்களையும் முழு மானியத்துடன் வழங்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதியான நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு வந்து அடையவில்லை என விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- 
கொரோனா விழிப்புணர்வு நாள்
காமராஜர் பிறந்த நாளை கொரோனா விழிப்புணர்வு நாளாக த.மா.கா. கொண்டாட இருக்கிறது. த.மா.கா.விற்கு சைக்கிள் சின்னம் கிடைக்காதது,  அ.தி.மு.க. கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்டதில் 6 தொகுதிகள் தான் கிடைத்தது, அதிலும் நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. அவையெல்லாம் தேர்தலில் தோல்வி அடைய முக்கிய காரணங்கள். 
கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து வெற்றி தோல்வியை கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும் ஏற்று கொள்ள வேண்டும் என்பது தான் த.மா.கா.வின் நிலைப்பாடு. அ.தி.மு.க. தோல்வி குறித்து சி.வி.சண்முகம் ஒரு கருத்தை தெரிவித்த நிலையில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு கருத்தை கூறி உள்ளார்கள் என்பதையும் நினைவுப்படுத்துகிறேன்.
எந்த கட்சியும் விலகவில்லை
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் விலகவில்லை. த.மா.கா.வும் கூட்டணியில் நீடிக்கிறது என கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. த.மா.கா. தோல்வி அடைந்ததற்கு இரட்டை இலையும் காரணம் இல்லை, இரட்டை தலைமையும் காரணம் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு உலகில் பல நாடுகளையும் பாதித்து இருக்கிறது. 
இந்தியாவும் கடுமையாக பாதித்து இருக்கிறது. விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டவில்லை. காட்டக்கூடாது. தங்கு தடையின்றி தடுப்பூசியை நூறு சதவீதம் மக்களுக்கு செலுத்த குறிப்பிட்ட காலக்கெடுவை மத்திய அரசும், மாநில அரசும் நிர்ணயிக்க வேண்டும்.
‘நீட்’ தேர்வில் அரசியல்
‘நீட்’ தேர்வில் அரசியலைப் புகுத்தி மாணவர்களின் மனநிலையை குழப்ப வேண்டாம். மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு தயாராக இருக்கிறார்கள். அவர்கள் குழப்பம் அடையாமல் தயாராக வேண்டும். 
‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் முடிவு ஆட்சி செய்தவர்கள் கையிலும் இல்லை, தற்போது ஆட்சி செய்பவர்கள் கையிலும் இல்லை. அது நீதிமன்றத்தின் முடிவில் உள்ளது. எனவே ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்து மாணவர்களை குழப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story