டிரைவர் மர்ம சாவு


டிரைவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 9 July 2021 1:19 AM IST (Updated: 9 July 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொக்லைன் டிரைவர்

பனவடலிசத்திரம் அருகே உள்ள ஜமீன்இலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் திருமலைக்குமார் (வயது 28). இவர் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது 3 பேர் வந்து விருந்துக்கு அழைத்து உள்ளனர். அப்போது அங்கு செல்ல வேண்டாம் என்று திருமலைக்குமாரிடம் அவரது தாய் வேலுத்தாய் கூறி உள்ளார். அதன்பிறகு இரவு சுமார் 10.30 மணியளவில் 3 பேர் வந்து கூப்பிடவும் அவர்களுடன் திருமலைக்குமார் சென்றார். அதன்பிறகு இரவு வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. 

மர்ம சாவு 

இந்த நிலையில் நேற்று காலையில் பொக்லைன் உரிமையாளர், திருமலைக்குமாரின் தாயார் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, திருமலைக்குமாரை வேலைக்கு வர சொல்லும்வடி கூறி உள்ளார். அதன்பிறகே அவருக்கு திருமலைக்குமார் வேலைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரும், உறவினர்களும் திருமலைக்குமாரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது ஊருக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கிணற்றின் அருகே திருமலைக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து தாயார் கதறி அழுதார்.

போலீசார் விசாரணை

பின்னர் இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, திருமலைக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதற்கிடையே, வேலுத்தாய் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக பனவடலிசத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரி முன்பு திருமலைக்குமாரின் உறவினர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

திருமலைக்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். டிரைவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Next Story