கிணற்றில் தவறி விழுந்து தாத்தா-பேரன் சாவு
பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தாத்தா-பேரன் பரிதாபமாக இறந்தனர்.
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தாத்தா-பேரன் பரிதாபமாக இறந்தனர்.
தாத்தா-பேரன்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60), விவசாயி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு ரமேஷ், மாரிமுத்து என்ற 2 மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர்.
மாரிமுத்துக்கும், மணிமாலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஹரிவர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
கிணற்றில் தவறி விழுந்தார்
விவசாயி மாரியப்பன் தனது பேரன் ஹரிவர்ஷனிடம் மிகவும் பிரியமாக இருப்பார். நேற்று அவரது தோட்டத்தில் பயிர்களுக்கு களை எடுக்கும் பணி நடைபெற்றது. இதனால் அவர் தனது பேரனை தூக்கிக்கொண்டு தோட்டத்துக்கு சென்றார்.
அங்கு தண்ணீர் குடிப்பதற்காக கிணற்றை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாரியப்பன் தனது பேரனுடன் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
பரிதாப சாவு
இதில் அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, கிணற்றுக்குள் குதித்து அவர்களை தேடினர். ஆனால் அதற்குள் மாரியப்பனும், குழந்தை ஹரி வர்ஷனும் பரிதாபமாக இறந்தனர்.
பின்னர் அவர்களது உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
சோகம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பனவடலிசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாரியப்பன், ஹரிவர்ஷன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் விவசாயி தனது பேரக்குழந்தையுடன் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story