கிராமத்தினரால் அவமதிக்கப்பட்டவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கிய மோடி
கிராமத்தினரால் அவமதிக்கப்பட்ட நாராயணசாமி எம்.பி.க்கு மந்திரி பதவி வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கவுரவித்துள்ளார்.
பெங்களூரு: பிரதமர் மோடி தனது மந்திரிசபையை அதிரடியாக மாற்றி அமைத்து உள்ளார். இதில் புதிதாக 43 பேர் பதவி ஏற்று உள்ளனர்.
அதில் கர்நாடகத்தை சேர்ந்த 4 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்து உள்ளது. அந்த 4 பேரில் ஒருவர் நாராயணசாமி. பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் கடந்த 1957-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி நாராயணசாமி பிறந்தார். நாராயணசாமியின் முழுப்பெயர் அப்பய்யா நாராயணசாமி. சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவரான நாராயணசாமி படிப்படியாக அரசியலில் வளர்ந்து வந்தவர்.
பா.ஜனதா கட்சியை சேர்ந்த நாராயணசாமி கர்நாடக சட்டசபைக்கு 4 முறை தேர்வாகி உள்ளார். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் எடியூரப்பாவின் மந்திரிசபையில் சமூக நலத்துறை மந்திரியாகவும் நாராயணசாமி பணியாற்றி இருந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் தலித் சமூகத்தை சேர்ந்த நாராயணசாமி சித்ரதுர்கா தனி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் எம்.பி.யான சிறிது நாட்களில் நாராயணசாமி சந்தித்த ஒரு சம்பவம் அவரை நிலையகுலைய செய்தது.
அதாவது தனது தொகுதிக்கு உட்பட்ட துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா பீமனஹள்ளி கொல்லரஹட்டி கிராமத்தில் குடிநீர் திட்ட தொடக்க விழா மற்றும் புதிய வீடுகள் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க நாராயணசாமி அதிகாரிகளுடன் சென்றார். பீமனஹள்ளி கொல்லரஹட்டிக்கு சென்ற நாராயணசாமி காரில் இருந்து இறங்கி கிராமத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அங்கு கூடிய கிராம மக்கள், நாராயணசாமியை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதற்கு நாராயணசாமி காரணம் கேட்ட போது கிராம மக்கள் கூறிய பதில் கொடுமையின் உச்சம்.
அதாவது தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் உங்களை எங்கள் ஊருக்குள் நுழைய விட மாட்டோம் என்று கிராம மக்கள் கூறினர். இதனை கேட்டு நாராயணசாமி மனம் உடைந்தார். அவர் எவ்வளவோ எடுத்து கூறியும் கடைசி வரை அவரை கிராம மக்கள் தங்கள் ஊருக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இத்தனைக்கும் அவர் அந்த கிராம மக்கள் ஓட்டுகள் மூலம் எம்.பி. ஆனவர்.
இதனால் வருத்தத்துடன் தனது காரில் ஏறி சென்ற நாராயணசாமி எனது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற மோசமான நாளை சந்தித்தது இல்லை என்று கூறினார். நாராயணசாமியை கிராம மக்கள் அவமதித்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் கர்நாடக உயர் அதிகாரிகள் பீமனஹள்ளி கொல்லரஹட்டிக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் எதிரொலியாக நாராயணசாமியை தங்களது ஊருக்குள் வர கிராம மக்கள் அனுமதித்தனர். பின்னர் ஒரு வாரம் கழித்து பீமனஹள்ளி கொல்லரஹட்டி கிராமத்திற்குள் பூரண கும்ப மரியாதையுடன் நாராயணசாமி அழைத்து செல்லப்பட்டார்.
Related Tags :
Next Story