எடியூரப்பாவுக்கு எதிரான மனு தள்ளுபடி


முதல்-மந்திரி எடியூரப்பா
x
முதல்-மந்திரி எடியூரப்பா
தினத்தந்தி 9 July 2021 3:04 AM IST (Updated: 9 July 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு: எடியூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

எடியூரப்பா மீது ஊழல் புகார்

கர்நாடக முதல்-மந்திரியாக இருப்பவர் எடியூரப்பா. இவர் மீது கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவிடம் சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் என்பவர் பரபரப்பு புகார் கடிதம் வழங்கினார்.

அதில், பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் வீட்டு வசதி திட்ட குடியிருப்புகள் கட்டுவதற்கான டெண்டர் விட்டதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி வழங்குமாறும் கோரினார். ஆனால்   எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி வழங்க மறுத்து கவர்னர் உத்தரவிட்டார்.

மனு தள்ளுபடி

இதையடுத்து முதல்-மந்திரி எடியூரப்பா மீதான ஊழல் புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் அந்த சமூக ஆர்வலர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி, முதல்-மந்திரி எடியூரப்பா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்காத காரணத்தால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.

எடியூரப்பாவுக்கு எதிராக...

முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஊழல் தடுப்பு படையில் எடியூரப்பாவுக்கு எதிராக புகார் செய்ததாகவும், ஆனால் அதுகுறித்து ஊழல் தடுப்பு படை விசாரிக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

Next Story