சுமலதா எம்.பி. குறித்து என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்; குமாரசாமி ஆவேசம்


முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
x
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
தினத்தந்தி 9 July 2021 3:15 AM IST (Updated: 9 July 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

கல்குவாரி விஷயத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில் சுமலதா எம்.பி. குறித்து என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்று குமாரசாமி ஆவேசமாக கூறினார்.

பெங்களூரு: கல்குவாரி விஷயத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில் சுமலதா எம்.பி. குறித்து என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்று குமாரசாமி ஆவேசமாக கூறினார்.

கைகட்டி நிற்கும் புகைப்படம்

மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணை மற்றும் அதனை சுற்றி நடைபெறும் கல்குவாரி தொழில் குறித்து நடிகை சுமலதா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கல் குவாரி தொழில் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, சுமலதா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. குமாரசாமி தனது அண்ணன் மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சுமலதா கூறினார்.

இதற்கு பதிலளித்த குமாரசாமி, தனது குடும்பத்தை சுமலதா உடைக்க பார்க்கிறார் என்று கூறினார். இந்த நிலையில் சுமலதாவின் கணவரான நடிகர் அம்பரீஷ் முன்பு குமாரசாமி கைகட்டி நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதுகுறித்து குமாரசாமி நேற்று மத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கேள்வி கேட்காதீர்கள்

காவிரி போராட்ட குழு தலைவர் மாதேகவுடா உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க செல்கிறேன். அம்பரீஷ் உயிருடன் இருந்தபோது அவருடன் நான் இருந்த புகைப்படத்தை சிலர் வெளியிட்டுள்ளனர். அதில் நான் கைகட்டியபடி உள்ளேன். அவருக்கு நான் அடிமையாக இருந்தேனா?. மக்களின் நலனுக்காக அனைவரிடமும் கைகட்டி நிற்க நான் தயாராக உள்ளேன். அதில் எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை.

சுமலதா எம்.பி. குறித்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். உங்களுக்கு (பத்திரிகையாளர்கள்) வேறு வேலை இல்லையா?. வேலைக்கு வராத விஷயங்கள் குறித்து என்னிடம் கேட்கிறீர்கள். நான் மாநில முதல்-மந்திரியாக பணியாற்றியவன். தனிப்பட்ட நபர் குறித்து நீங்கள் அடிக்கடி கேள்வி கேட்பது ஏன்?. கடந்த நாடாளுமன்ற தேர்தல் எப்படி நடந்தது, அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பது எங்களுக்கு தெரியும்.

ஆதாரங்களை வெளியிட்டோம்

பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. அது குறித்து நீங்கள் பேசுவது இல்லை. மக்களின் கஷ்டங்கள் குறித்து நீங்கள் பேசுவது இல்லை. மாநிலத்திற்கு தொடர்பான விஷயங்கள் இருந்தால் கேளுங்கள். ஊழலுக்கு எதிராக போராடியதே தேவேகவுடா குடும்பம் தான். ஊழலுக்கு எதிராக நாங்கள் ஆதாரங்களை வெளியிட்டோம். ஊடகங்கள் மாநிலத்தை பாழாக்கும் வேலையை செய்ய வேண்டாம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story