வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இ-சேவை மையம் தொடங்க வேண்டும்- கூட்ட நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை
தாலுகா அலுவலகங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இ-சேவை மையம் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சேலம்:
தாலுகா அலுவலகங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இ-சேவை மையம் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆதார் கார்டு
நாடு முழுவதும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறவும், அதே போன்று விவசாயிகள் மானியம் மற்றும் விவசாய கடன்கள் பெறவும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளியில் சேருவதற்கும் ஆதார் கார்டு கட்டாயம் ஆகும்.
கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் இ-சேவை மையங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பல மாதங்களாக இ-சேவை மையங்கள் திறக்கப்படாததால் சேலம் சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் ஆதார் கார்டு பெற காத்து கிடக்கின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகம்
குறிப்பாக நேற்று சேலம் மேற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஏராளமானவர்கள் கூடினர். பின்னர் அவர்கள் வரிசையாக அலுவலகத்தில் உட்கார்ந்து காத்திருந்தனர். இதேபோன்ற நிலை தான் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் காணப்படுகிறது. எனவே தாலுகா அலுவலகம் மட்டுமின்றி வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் இ-சேவை மையம் தொடங்கினால் மக்கள் கூட்ட நெரிசல் இன்றி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது ‘தற்போது தாலுகா அலுவலகங்களில் மட்டும் இ-.சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. அதிகம் பேர் ஒரே நேரத்தில் கூடுவதால் ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் ஒரு நாளைக்கு 20 பேருக்கு மட்டுமே ஆதார் கார்டு அட்டை பெற பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் இ-சேவை மையம் அமைக்க வேண்டும்’ என்றார்கள்.
Related Tags :
Next Story