பெட்ரோல்-டீசல், கியாஸ் விலையை குறைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-டீசல், கியாஸ் விலையை குறைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2021 3:52 PM IST (Updated: 9 July 2021 3:52 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலையை குறைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து அமரர் ஊர்தியில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமர்ந்த ராஜா தலைமை தாங்கினார். நகர தலைவர் உதயசந்திரன் முன்னிலை வகித்தார். இதில் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் நாகூர் ரபீக் உள்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திருமருகல் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் வட்டார தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, வட்டார பொது செயலாளர் கே.எஸ்.மதியழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட துறையின் தலைவர் சிவசங்கரன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் நவ்ஷாத், மாநில விவசாய பிரிவு செயலாளர் மீராஉசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை உடனே குறைக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வேதாரண்யம் பஸ் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் நகர தலைவர் வைரவன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆப்கான், நகர துணைத் தலைவர் அர்ஜுனன், சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், மகிளா காங்கிரஸ் தலைவி சத்யகலா, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரபிக், நகர தலைவர் ரஹமத்துல்லா உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மோட்டார் சைக்கிள் மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அமரர் ஊர்தியில் வைத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது பெண்கள் அமரர் ஊர்தியை சுற்றி நின்று ஒப்பாரி வைத்தனர்.

Next Story