திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2டன் மஞ்சள் சிக்கியது


திருச்செந்தூரில் இருந்து  இலங்கைக்கு கடத்த முயன்ற 2டன் மஞ்சள் சிக்கியது
x
தினத்தந்தி 9 July 2021 6:26 PM IST (Updated: 9 July 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் போலீசாரிடம் சிக்கியது. கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் போலீசாரிடம் சிக்கியது. கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கைக்கு கடத்தல்
இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு முறைகேடாக கடத்தப்படும் மஞ்சளை போலீசார் அடிக்கடி பறிமுதல் செய்து வருகின்றனர். இதையடுத்து கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த ஆலந்தலை கடல் வழியாக இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவில் ரகசிய தகவல் கிடைத்தது.
மினி லாரி
உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் தலைமையில் போலீசார், ஆலந்தலை கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அப்போது அங்கு கடற்கரையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பகுதியில் சந்தேகப்படும்படியாக மினி லாரி நின்று கொண்டிருந்தது.
உடனே போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசாரைக் கண்டதும் மினி லாரியில் இருந்த சிலர் கீழே இறங்கி இருளில் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை.
2 டன் மஞ்சள்
இதையடுத்து அந்த மினி லாரியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 35 கிலோ எடையுள்ள 58 மூட்டைகளில் விரலி மஞ்சள் இருந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 30 கிலோ மஞ்சள் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக கூடங்குளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சளை வருவாய் துறையினர் மூலம் சுங்கவரித்துறையினரிடம் ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

Next Story