தஞ்சை அருகே இடப்பிரச்சினையில் தொழிலாளி வெட்டிக்கொலை


தஞ்சை அருகே இடப்பிரச்சினையில் தொழிலாளி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 9 July 2021 7:13 PM IST (Updated: 9 July 2021 7:13 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே இடப்பிரச்சினையில் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது தம்பி படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள சூழியக்கோட்டை அருகே உள்ள ஒத்தகொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன்கள் பிரபு(வயது 38), சின்னராசு(35). கூலி தொழிலாளர்களான இவர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சாலியமங்கலம் கடைவீதிக்கு செல்வதற்காக புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

சாலியமங்கலம் மெயின் சாலைக்கு 50 மீட்டர் தொலைவில் வந்த போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.

அப்போது பிரபுவும், சின்னராசுவும் வண்டியை நிறுத்துவதற்குள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் பிரபுவையும், சின்னராசுவையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது பிரபு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. படுகாயத்துடன் கிடந்த சின்னராசுவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்து கிடந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இடப்பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story