தஞ்சையில், 15-ந் தேதி விவசாயிகள் உண்ணாவிரதம் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி


தஞ்சையில், 15-ந் தேதி விவசாயிகள் உண்ணாவிரதம் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 9 July 2021 7:26 PM IST (Updated: 9 July 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் வருகிற 15-ந் தேதி(வியாழக்கிழமை) விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகர தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட செயலாளர் மணி, வடக்கு மாவட்ட செயலாளர் பாட்சா ரவி, திருப்பதி வாண்டையார், பாஸ்கரன், அர்ச்சுணன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று சவால் விடுகிறார். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. அண்டை மாநில உறவுகளை சீர்குலைக்க முயற்சிக்கும் செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீரை நம்பி 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்கி உள்ளது. அதனை தொடர முடியாத நிலை உள்ளது. பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய மந்திரியை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார். ஆணையத்தை சந்தித்து தமிழகத்துக்கான 40 டி.எம்.சி. தண்ணீரை பெற வலியுறுத்தவில்லை. பிரதமரோ, மத்திய மந்திரியோ, தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்கிற பொறுப்புணர்வுடன் செயல்பட மாட்டார்கள்.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர்தான் கண்காணிப்பு குழுவை அனுப்பி தண்ணீரை பெற்று தரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை சந்தித்து அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும். இல்லையேல் சுப்ரீம் கோர்ட்டில் அவசர முறையீடு செய்திருக்க வேண்டும்.

இந்நிலையில் வருகிற 15-ந் தேதி(வியாழக்கிழமை) முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்த நாளில் ராசிமணல் அணை கட்டுவோம், மேகதாது அணையை தடுத்து நிறுத்துவோம், கருகும் பயிரை காப்பாற்ற உரிய தண்ணீரை பெறுவோம் என்கிற முழக்கத்தை முன்வைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும், வலியுறுத்தியும் தஞ்சையில் விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இனியும் காலம் தாழ்த்தாது தமிழக முதல்-அமைச்சர் உரிய அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story