தூத்துக்குடி கடல் பகுதியில் நாளை மறுநாள் பவளப்பாறைகள் பாதுகாப்பு குறித்து கனிமொழி எம்.பி. ஆய்வு
தூத்துக்குடி கடல் பகுதியில் நாளைமறுநாள் பவளப்பாறைகள் பாதுகாப்பு குறித்து கனிமொழி எம்.பி. ஆய்வு மேற்கொள்கிறார்.
தூத்துக்குடி, ஜூலை.10-
தூத்துக்குடி கடல் பகுதியில் திங்கட்கிழமை பவளப்பாறைகள் பாதுகாப்பு குறித்து கனிமொழி எம்.பி. ஆய்வு மேற்கொள்கிறார்.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆய்வு
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ஆகியோர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடிக்கு வருகின்றனர்.
நாளை காலை 8 மணிக்கு கயத்தாறு ஒன்றியம் கட்டாலங்குளத்தில் அமைந்து உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் தொழில்துறை மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைக்கிறார். தொடர்ந்து கனிமொழி எம்.பி. முன்னிலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
திங்கட்கிழமை
திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தூத்துக்குடி கடல் பகுதியில் நபார்டு வங்கி மூலம் செயல்படுத்தப்படும் பவளப்பாறை பாதுகாப்பு பணிகள் குறித்து கனிமொழி எம்.பியும், நானும் ஆய்வு செய்ய உள்ளோம். மதியம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி கலந்து கொள்கிறார்.
எனவே கொரோனா கால ஊரடங்கில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story