தூத்துக்குடியில் விசைப்படகுகள் இடமாற்றம் குறித்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை
தூத்துக்குடியில் விசைப்படகுகள் இடமாற்றும் குறித்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் விசைப்படகுகள் மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக மீனவர்களிடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தை
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்த 3 விசைப்படகுகள் தருவைகுளத்துக்கு மாற்றப்பட்டன. இந்த விசைப்படகுகளில் இழுவலையை பயன்படுத்தக்கூடாது என்றும், தருவைகுளத்தில் உள்ள மற்ற மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய வலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து இரு தரப்பு மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக மீன்வளத்துறை ஆணையர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், தென்மண்டல ஐ.ஜி. அன்பு, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இருதரப்பு மீனவர்களும் கலந்து கொண்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் மீனவர்கள் அவகாசம் கேட்டு இருப்பதாகவும், முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆய்வு
முன்னதாக தென்மண்டல ஐ.ஜி. அன்பு, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு சென்றனர். அங்கு விசைப்படகுகள் நிறுத்தக்கூடிய இடங்கள், மீன் ஏலம் விடக்கூடிய இடங்களை பார்வையிட்டனர். விசைப்படகுகளிலும் ஏறி சென்று ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story