தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழை எதிரொலியாக ஆத்தூர் காமராஜர் அணை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்:
தொடர்மழை எதிரொலியாக ஆத்தூர் காமராஜர் அணை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் மட்டும் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி 33.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கொடைக்கானல் போட்ஹவுஸ் பகுதியில் 15 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 59.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதன்படி ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 23.5 அடி உயரம் கொண்ட ஆத்தூர் காமராஜர் அணையில் தற்போது 13.5 அடி வரை தண்ணீர் உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பாலாறு-பொருந்தலாறு அணை
இதேபோல் 65 அடி உயரம் கொண்ட பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் தற்போது 47.5 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 29 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 66 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 23 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மேலும் 90 அடி உயரம் கொண்ட பரப்பலாறு அணையில் தற்போது 73 அடி வரை தண்ணீர் உள்ளது. 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையில் தற்போது 51.66 அடி வரை தண்ணீர் உள்ளது. 27 அடி உயரம் கொண்ட குடகனாறு அணையில் தற்போது 11.02 அடி வரை தண்ணீர் உள்ளது. 39 அடி உயரம் கொண்ட நங்காஞ்சியாறு அணையில் தற்போது 29.86 அடி வரை தண்ணீர் உள்ளது. பரப்பலாறு உள்பட 4 அணைகளுக்கும் நீர்வரத்தும் இல்லை. வெளியேற்றமும் இல்லை.
தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story