குடிநீரில் கலக்கும் கழிவுநீர்


குடிநீரில் கலக்கும் கழிவுநீர்
x
தினத்தந்தி 9 July 2021 8:38 PM IST (Updated: 9 July 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மயானத்துக்கு செல்லும் சாலையில் கற்களை அடுக்கி மக்கள் அடைத்தனர்.

தேனி: 

குடிநீரில் கழிவுநீர்
தேனி கலெக்டர் அலுவலகம் அருகே கருவேல்நாயக்கன்பட்டி அமைந்துள்ளது. இது, தேனி அல்லிநகரம் நகராட்சியின் 33-வது வார்டு பகுதியாகும். இங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் 4-வது தெருவில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. 

வீடுகளுக்கு முன்பும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குடிநீர் இணைப்பு குழாய்களை சாக்கடை கழிவுநீர் சூழ்ந்து தேங்கிநிற்பதால் குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் தீர்வு கிடைக்காத விரக்தியில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மயானத்துக்கு செல்லும் சாலையில் கற்களை அடுக்கி வைத்தும், பழைய சைக்கிளை நிறுத்தியும் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி உள்ளனர். இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலையை அடைத்துள்ளனர்.

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கேட்ட போது, "கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்குள் சாக்கடை புழுக்கள் வருகின்றன. குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப்போக்கால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சாக்கடை கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் தேங்காமல் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகிறோம். 

3 மாதத்துக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தோம். ஆனாலும், எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. அதனால், கற்களை அடுக்கி வைத்து சாலையை அடைத்துள்ளோம். இதே நிலை நீடித்தால் போராட்டங்களில் ஈடுபடவும் தள்ளப்படுவோம்" என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து சாக்கடை கால்வாயை தூர்வாரவும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலையில் அடுக்கி வைத்த கற்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தினர்.

Next Story