அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி மீது புகார் கூறப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வன் மனைவி மலர்மகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகன் பொறியியல் பட்டதாரி. அவருக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் தலைமை பொறியாளராக வேலை வாங்கித்தருவதாக தென்காசி மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி ஒருவர் கூறினார். இதை நம்பி திண்டிவனத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரை அழைத்துச்சென்று கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி நானும், எனது கணவரும் ரூ.11 லட்சத்தை அவரிடம் கொடுத்தோம். இதேபோல் எனது உறவினரின் மகனுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அலுவலக உதவியாளர் பணி வாங்கித்தருவதாக கூறினார். இதற்காக தனியாக ரூ.9 லட்சத்தை கொடுத்தோம். ஆனால் இதுவரையிலும் 2 பேருக்கும் அரசு வேலை வாங்கித்தரவில்லை. நாங்கள் வற்புறுத்தி பணத்தை கேட்டதற்கு கடந்த 2020 ஆகஸ்டு 17-ந் தேதி ரூ.3 லட்சமும், செப்டம்பர் 17-ந் தேதி ரூ.5 லட்சமும் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பினார். மீதமுள்ள தொகையான ரூ.12 லட்சத்தை திரும்பத்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். எனவே பணத்தை மோசடி செய்த தென்காசி அ.தி.முக. மகளிரணி நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்து விசாரிப்பதாக கூறினர்.
Related Tags :
Next Story