வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடி
தடுப்பணைகள் நிரம்பின
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. தமிழக, ஆந்திர எல்லையில் உள்ள குப்பம், தேவராஜபுரம், நாராயணபுரம், அம்பலூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், அலசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக காட்டாறு, மண்ணாறுகளிலும், அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் வழியாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் வந்து கலந்தது. கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் மழையால் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், சுற்று பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும் ஆந்திர எல்லையில் கட்டப்பட்டுள்ள 22 தடுப்பணைகள் நிரம்பி, தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணை 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிகிறது.
இதனால் கரைகளின் இருபுறமும் தொட்டபடி வெள்ளம் செல்கிறது. ஆவாரங்குப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, ஜாப்ராபாத் வழியாக இரு கரைகளையும் தொட்டபடி வந்த தண்ணீர் வாணியம்பாடி- மேட்டுப்பாளையம் பாலத்தை கடந்து தண்ணீர் வேலூரை நோக்கி சென்றது.
வெள்ளப்பெருக்கு
தமிழக ஆந்திர எல்லைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பின்பு வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்ரமணி உள்ளிட்டவர்கள் பாலாற்றில் மலர்தூவி, கற்பூரம் ஏற்றியும் விவசாயிகளுடன் இணைந்து தண்ணீரை வரவேற்றனர். தொடர்ந்து அம்பலூர் பாலாற்று பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு செல்லும் வழியில் வெலதிகமாணிபெண்டா மலை பகுதியில் திடீரென மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் பஸ் போக்குவரத்து தடை விதி்க்கப்பட்டது. நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் மலைப் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன.
கலெக்டர் பார்வையிட்டார்
இந்த இடத்தையும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். சாலையை உடனடியாக சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல் நாராயணபுரம் அருகே உள்ள ஜவ்வாதுராமசமுத்திரம் ஏரி உடைந்து விடாமல் இருக்க மணல் முட்டைகளை அடுக்கவும் உத்திரவிட்டார். அப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பகுதிளை பார்வையிட்டு அங்கேயும் தேவையான அளவு மணல் முட்டைகளை அடுக்கவும் உத்திரவிட்டார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றோரப் பகுதியில் உள்ள தேங்காய் மண்டிகளில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதேபோல் வாணியம்பாடி- மேட்டுப்பாளையம் பாலாற்றில் 2 பசு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டது. நாராயணபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான நெற்பயிர்கள், வாழைமரங்கள் தண்ணீரில் மூழ்கின. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story