விபத்தில் சிக்கிய வாலிபருக்கு முதலுதவி அளித்த எம்.எல்.ஏ.
விழுப்புரம் அருகே விபத்தில் சிக்கிய வாலிபருக்கு எம்.எல்.ஏ. முதலுதவி அளித்தாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஆர்.லட்சுமணன் நேற்று காலை கோலியனூர் பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சிக்காக அவர் விழுப்புரத்தில் இருந்து தனது காரில் சென்றார்.
அப்போது ராகவன்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் வந்த பனங்குப்பத்தை சேர்ந்த தண்டபாணி மகன் ஜெயக்குமார் (வயது 24) என்பவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். இதில் அவரது இடதுகாலில் எலும்புமுறிவு ஏற்பட்டு, வலியால் அலறி துடித்தார்.
இதனை பார்த்த டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தனது காரை நிறுத்தச்சொல்லி கீழே இறங்கினார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதை அறிந்த அவர், உடனடியாக ஜெயக்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
மேலும் லட்சுமணன், எலும்பு முறிவு டாக்டர் என்பதால், விபத்தில் சிக்கிய ஜெயக்குமாரின் காலில் துணியை வைத்து கட்டுப்போட்டு முதலுதவி அளித்தார். பின்னர் தன்னுடன் வந்த தி.மு.க. நிர்வாகிகள் மூலம் ஜெயக்குமாரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார். எம்.எல்.ஏ.வின் இந்த மனிதநேயமிக்க செயலைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story