கல்வராயன்மலையில் மூலிகைப்பண்ணை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்
கல்வராயன்மலையில் மூலிகைப்பண்ணை அமைப்பதற்கான இடத்தை தேர்வுசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
கச்சிராயப்பாளையம்
மூலிகைப் பண்ணை
கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. சுமார் 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இங்கு பல வகையான மூலிகை செடிகளும், விலை உயர்ந்த மரங்களும் உள்ளன. இந்த நிலையில் கல்வராயன் மலைப்பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை பாதுகாக்கும் வகையில் சித்த மருத்துவத்திற்கு தேவையான மூலிகைப் பொருட்கள் தயாரிக்கவும், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து அதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையிலும் தமிழக அரசு சார்பில் கல்வராயன் மலையில் மூலிகைப் பண்ணை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 ஏக்கர் நிலம்
இதற்காக 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்னாடு, வெள்ளிமலை, கரியாலூர், மாவடிப்பட்டு, சேராப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களை தாசில்தார் ஆனந்தசயன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் அருண்ராஜா, துணை தாசில்தார் மனோஜ் முனியன் மற்றும் வருவாய்த் துறையினரை கொண்ட குழுவினர் இடத்தை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இடம் தேர்வான பிறகு பொறியாளர்கள் மூலம் கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் தயாரித்து அரசுக்கு சமர்ப்பிப்பார்கள். பின்னர் அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் மூலிகைப்பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கல்வராயன் மலையில் மூலிகைப்பண்ணை அமைய உள்ளதை அறிந்து மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story