அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்


அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 9 July 2021 11:31 PM IST (Updated: 9 July 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

ஆனி அமாவாசையையொட்டி திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தளி
ஆனி அமாவாசையையொட்டி திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அமணலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிமார் மற்றும் நவகிரக சன்னதிகளும் உள்ளன.
கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றை பார்வையிடவும் அணைப்பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது.
ஆனி அமாவாசை
இந்த சூழலில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்கள் குறைந்த அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 
இந்த நிலையில் நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு கோவிலில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். அப்போது நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. 
அருவியில் குளிக்க அனுமதி இல்லை
மேலும் முககவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்யுமாறு நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்கள். முடி காணிக்கை வழங்குவதற்கும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்குமாறும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story