2½ மாதங்களுக்கு பிறகு திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் திறப்பு


2½ மாதங்களுக்கு பிறகு திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் திறப்பு
x
தினத்தந்தி 10 July 2021 12:09 AM IST (Updated: 10 July 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

2½ மாதங்களுக்கு பிறகு திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் திறக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஏர்வாடி:
2½ மாதங்களுக்கு பிறகு திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் திறக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருமலைநம்பி கோவில்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோவில் உள்ளது. 2-ம் கட்ட கொரோனா பரவல் காரணமாக இந்த கோவில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியவில்லை.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த 5-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலை திறக்க வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.

கோவில் திறப்பு

இந்தநிலையில் கோவிலை திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் யோகேஸ் சிங், களக்காடு துணை இயக்குனர் அன்பு ஆகியோர் உத்தரவின் பேரில் 2½ மாதங்களுக்கு பிறகு நேற்று கோவில் திறக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்குள்ள சோதனைச்சாவடியில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லவோ, ஆற்றில் குளிக்கவோ அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். கோவில் திறக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story