பல்பொருள் அங்காடியில் பணம், பொருட்கள் திருட்டு
பல்பொருள் அங்காடியில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் மெயின் பஜாரில் சம்சுதீன் மகன் முஸம்மில் என்பவர் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் பல்பொருள் அங்காடி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வியாபாரத்தை முடித்து விட்டு முகம்மது முஸம்மில் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை அந்த வழியாக சென்ற போது தனது கடையின் பூட்டு மற்றும் ஷட்டர் கடப்பாரையால் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் மற்றும் ஏராளமான வெளிநாட்டு பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story