ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஜேஷ்டாபிஷேகம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஜேஷ்டாபிஷேகம்
x
தினத்தந்தி 10 July 2021 12:36 AM IST (Updated: 10 July 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம், 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

ஜேஷ்டாபிஷேகம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் ஜூன் மாதம் 23-ந் தேதியும், ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 2-ந் தேதியும் நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும் மற்றும் 10 வெள்ளிக்குடங்களில் புனித நீரை கோவில் பணியாளர்கள் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க வடக்குவாசல் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. 

புனிதநீர்

பின்னர் புனிதநீர் மூலம் காலை 10 மணிக்கு சக்கரத்தாழ்வார் மற்றும் செங்கமலவல்லி தாயார் சன்னதிகளில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நெய்வேத்தியம் மாலை நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோவிலில் காலை 10 மணிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

சிங்கர்பெருமாள் கோவிலில் அழகிய சிங்கருக்கு அணிவிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பழுது நீக்கி, சுத்தம் செய்யப்பட்டு, எடை சரிபார்க்கப்பட்டது. நேற்று முழுவதும் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லிதாயார், திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவில் சன்னதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Next Story