கல்லக்குடியில் பரிதாபம்: தாத்தாவுக்கு நினைவஞ்சலி செலுத்த வந்த என்ஜினீயர் ஏரியில் மூழ்கி பலி


கல்லக்குடியில் பரிதாபம்: தாத்தாவுக்கு நினைவஞ்சலி செலுத்த வந்த என்ஜினீயர் ஏரியில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 10 July 2021 12:36 AM IST (Updated: 10 July 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

கல்லக்குடியில் தாத்தாவுக்கு நினைவஞ்சலி செலுத்த வந்த என்ஜினீயர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்லக்குடி, 
கல்லக்குடியில் தாத்தாவுக்கு நினைவஞ்சலி செலுத்த வந்த என்ஜினீயர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாத்தாவுக்கு நினைவஞ்சலி

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). இவருடைய மகன் விஜய்பிரகாஷ்(21). என்ஜினீயரிங் பட்டதாரி. திருச்சி மாவட்டம் கல்லக்குடி சமத்துவபுரத்தில் வசித்து வந்த விஜய்பிரகாசின் தாத்தா கடந்த ஆண்டு இறந்து விட்டார். 

நேற்று முன்தினம் அவருக்கு முதலாம் ஆண்டு நினைவுநாள். இதனால் அவருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்த, விஜய்பிரகாஷ் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் கல்லக்குடிக்கு வந்திருந்தார். 

ஏரியில் மூழ்கி சாவு

இந்தநிலையில் நேற்று விஜய்பிரகாஷ் தனது உறவினர்களுடன் அங்குள்ள நல்ல தண்ணி ஏரிக்கு குளிக்க சென்றார். எல்லோரும் குளிப்பதை பார்த்து, விஜய்பிரகாசும் ஏரியில் குளித்துள்ளார். அப்போது ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கினார்.

இதைப்பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் விஜய்பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாத்தாவுக்கு நினைவஞ்சலி செலுத்த வந்த பேரன் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story