காவேரிப்பட்டணம் அருகே குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
ஜகதாப், எர்ரஅள்ளி ஊராட்சிகளில் குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
காவேரிப்பட்டணம்:
அமைச்சர் ஆய்வு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடைகோடி கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் தண்ணீர் தடையின்றி கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்தார். காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் ஜகதாப் ஊராட்சியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீர் வழங்கும் முறை
மேலும் குடிநீர் வினியோகிக்கப்படும் பகுதிகள் குறித்தும், குடிநீர் வினியோகம் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் எர்ரஅள்ளி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டு, தண்ணீர் வழங்கும் முறை குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சணாமூர்த்தி, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. (ஓசூர்), முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செங்குட்டுவன், கண்காணிப்பு பொறியாளர் மணிகண்டன், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர் சங்கரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story