புள்ளி மான், வாகனத்தில் அடிபட்டு பலி


புள்ளி மான், வாகனத்தில் அடிபட்டு பலி
x
தினத்தந்தி 9 July 2021 7:42 PM GMT (Updated: 9 July 2021 7:42 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளி மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.

ஆரல்வாய்மொழி, 
ஆரல்வாய்மொழி அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளி மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.
அரியவகை மான்
பூதப்பாண்டி வனச்சரத்திற்கு உட்பட்ட தெற்கு மலை பகுதிகளில் ஏராளமான விலங்குகள் வாழ்கின்றன. அதில் அரியவகை புள்ளிமானும் ஒன்று. 
தெற்கு மலை அடிவார பகுதியில் காவல்கிணறு-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. சில நேரங்களில் மலையில் வாழும் விலங்குகள் உணவு, தண்ணீருக்காகவும், பிற விலங்குகள் விரட்டுவதாலும் மலை அடிவாரத்திற்கு வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன.
வாகனம் மோதியது
 இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மூன்று வயது ஆண் புள்ளிமான் பழவூர் போலீஸ்நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்து கிடந்தது. இதுபற்றி ஆரல்வாய்மொழியில் உள்ள பூதப்பாண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் பிரதீபா, வனக்காவலர் விதின் ராஜ், வனகுழு தலைவர் வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், இறந்து கிடந்த புள்ளிமானை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டு வனச்சரக அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டது.
கோரிக்கை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தண்ணீர் கிடைக்காததால் மலை பகுதியில் வெளியேரும் விலங்குகள் அடிக்கடி வாகனம் மோதி இறக்கின்றன. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மலை அடிவார பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story