கே.ஆர்.எஸ். அணையில் விரிசலா?; நீர்ப்பாசன துறை அதிகாரி விளக்கம்


கே.ஆர்.எஸ். அணை
x
கே.ஆர்.எஸ். அணை
தினத்தந்தி 10 July 2021 1:26 AM IST (Updated: 10 July 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பதற்கு நீர்ப்பாசனத் துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு: மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பதற்கு நீர்ப்பாசனத் துைற அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

கே.ஆர்.எஸ். அணையில் விரிசல்?

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை உள்ளது. இந்த அணை தமிழ்நாடு-கர்நாடக விவசாயிகளின் உயிர் நாடியாகவும் திகழ்கிறது. இந்த அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. 

இந்த அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும், இதற்கு சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதே காரணம் என்றும், மண்டியா மாவட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சட்டவிரோத கல்குவாரி செயல்படுவதாகவும் நடிகையும், மண்டியா எம்.பி.யுமான சுமலதா கூறினார். 

குமாரசாமி-சுமலதா மோதல்

இதற்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவர் குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மண்டியா மாவட்ட எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள். இதனால் இந்த விவகாரத்தில் சுமலதாவுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சியினருக்கும் இடையே இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக குமாரசாமி, சுமலதா இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பாசனத் துறை நிர்வாக அதிகாரி ஜெயபிரகாஷ் அணையில் விரிசல் ஏற்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

விரிசல் ஏற்படவில்லை

அதுகுறித்து அவர் கூறியதாவது:-
கே.ஆர்.எஸ். அணையில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. அணை பாதுகாப்பு குழு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு தான் அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது. ஆனால் அணையின் பிரதான சுவரிலோ அல்லது வேறு பகுதியிலோ விரிசல் மற்றும் கட்டமைப்பில் குறைபாடுகள் கண்டறியப்படவில்லை. அணை பாதுகாப்பாக இருப்பதாக அந்த குழு தெரிவித்தது. 

நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் கே.ஆர்.எஸ். அணையில் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கே.ஆர்.எஸ். அணைக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story