ஊரடங்கை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 45 பேர் மீது வழக்கு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 10 July 2021 1:34 AM IST (Updated: 10 July 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதால் கரூரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்
அண்ணாமலை நியமனம்
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை மந்திரியாக பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனை கொண்டாடும் விதமாக நேற்று காலை கரூர் மனோகரா கார்னர் அருகே கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, இருசக்கர வாகன ஊர்வலம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 இதனையடுத்து கரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சிவசாமி தலைமையில், செந்தில்நாதன் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் மனோகரா கார்னர் பகுதியில் கூடி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கலெக்டர் கார் சிக்கிக்கொண்டது
 இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரின் கார் நெரிசலில் சிக்கிக் கொண்டது. அப்போது அவர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியிடம், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது எப்படி கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்தீர்கள் என்று கடிந்து கொண்டதோடு, அவர்களை கைது செய்யுமாறு கூறி அங்கிருந்து சென்றார்.
 இதனையடுத்து போலீசார் பா.ஜ.க.வினரை கைது செய்ய முயன்றனர். இதனால், பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.
45 பேர் மீது வழக்கு
 இதனையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் பா.ஜ.க.வினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து இருசக்கர வாகன ஊர்வலம் செல்லவில்லை என்று கூறி பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தநிலையில் ஊரடங்கை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Next Story