முத்தாலம்மன் பஜாரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்


முத்தாலம்மன் பஜாரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 9 July 2021 8:06 PM GMT (Updated: 9 July 2021 8:06 PM GMT)

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். 
போக்குவரத்து நெரிசல் 
வத்திராயிருப்பில் மிகவும் முக்கிய பஜார் ஆகமுத்தாலம்மன் திடல் பகுதி உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்களை ஒழுங்குப்படுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
அதிலும் குறிப்பாக காலை 6 மணி முதல் 10 மணி வரை யிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
மேலும் மகாராஜபுரம், கூமாபட்டி, கான்சாபுரம், கோட்டையூர், பேரையூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாமல் முத்தாலம்மன் திடல் பகுதியில் திரும்பி செல்வதாலும் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
சுற்றுலா பயணிகள் 
இதேபோல் பிளவக்கல் அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்களும் இந்த வழியாக தான் செல்கின்றன. 
அதேபோல  உள்ளூர், வெளியூருக்கு ஆலை பணிக்காக ஆட்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் இந்த வழியாக தான் வருகின்றன. பணி முடித்து மாலை நேரங்களில் வரும் வாகனங்கள் பஜார் பகுதியில் வரிசையாக நின்று ஆட்களை இறக்கி விடுகின்றனர். 
இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். 
எனவே போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும், பஜார் பகுதியில் ஆலை பணியாளர்களை இறக்கி விடுவதை தவிர்த்து மாற்று இடத்தில் இறங்கி விடவும், வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையம் சென்று வரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story