பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி செத்தது
பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி செத்தது. சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது அந்த புலி பரிதாபமாக உயிரிழந்தது.
கொள்ளேகால்:பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி செத்தது. சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது அந்த புலி பரிதாபமாக உயிரிழந்தது.
காயத்துடன் சுற்றிய புலி
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த புலிகள் பாதுகாப்பு சரணாலயமாகவும் உள்ளது. இந்த நிலையில், பந்திப்பூர் வனப்பகுதியில் குந்தகெரே அருகே நந்தலகஸ்தனி கிராமத்தின் அருகே கடந்த சில தினங்களாக புலி ஒன்று காலில் காயத்துடன் சுற்றித்திரிந்தது.
இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலியை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி வனத்துறையினர் நேற்று முன்தினம் அந்த புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி மூலம் 2 முறை புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தியதும் சிறிது தூரம் சென்று புலி மயங்கி விழுந்தது.
செத்தது
இதையடுத்து வனத்துறையினர் அந்த புலியை மீட்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். அப்போது, அந்த புலியின் கால் மற்றும் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கால் எலும்பு முறிந்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் மேல் சிகிச்சைக்காக அந்த புலியை பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் பெங்களூருவுக்கு செல்லும் வழியிலேயே அந்த புலி பரிதாபமாக செத்தது. இதையடுத்து அந்த புலி, சாம்ராஜ்நகருக்கு கொண்டு வந்து குழி தோண்டி புதைத்தனர்.
மற்றொரு புலியுடன் சண்டை
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வனப்பகுதியில் மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் இந்த புலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கால் எலும்பு முறிந்து இருந்தது. மேலும் கண்ணிலும் காயம் ஏற்பட்டது.
இதனால் அந்த புலியை பிடித்து சிகிச்சைக்காக பெங்களூரு பன்னரக்கட்டாவுக்கு அனுப்பி வைத்தோம். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அந்த புலி செத்துவிட்டது. இந்த புலிக்கு 5 வயது இருக்கும் என்றார்.
Related Tags :
Next Story